கடந்த வாரம் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வருகை தந்த தமிழ் ஈழத்தின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் அவர்களுடன் அருணகிரி அவர்கள் உரையாடிநார்கள். அவருடைய கேள்விகளும் அனந்தி சசிதரன் தந்த பதில்களும்.....
அருணகிரி: வணக்கம்.
வடக்கு மாகாண சபையின் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்..
ஆனந்தி சசிதரன்: இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தின்படி அமைந்த இந்த மாகாண சபை என்பது ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அல்ல. அதை நாங்கள் இப்போது உணர்ந்து உலகுக்குத் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். ஆனால், இடையில் ஒரு மூச்சு எடுத்துக் கொள்வது போன்ற இந்த அமைப்பில் எங்களுக்கு ஐந்து அமைச்சுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் எங்களுக்கு நிதி ஆதாரங்கள் எதுவும் கிடையாது. மத்திய அரசாங்கத்தில் இருந்துதான் நிதி ஒதுக்கப்படுகிறது. நாங்கள் கேட்கின்ற தொகையில், நூற்றுக்கு ஐந்து விழுக்காடு நிதிதான் ஒதுக்குகின்றார்கள். வடக்கு மாகாணம் போரினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே, இலங்கையின் இதர மாகாணங்களுக்கு வழங்குவது போல அல்லாமல் பத்து மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு தந்தால்தான் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க முடியும். மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடியதாக அமையும். ஆனால் ஏனைய மாகாணங்களைக் காட்டிலும் குறைவான நிதிதான் தருகின்றார்கள். எனவே, மாகாண சபை சிறந்த முறையில் இயங்க முடியவில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, இந்த மாகாணத்திற்கு வழங்கப்பட்ட காணி, காவல் அதிகாரங்கள் மீளவும் நாடாளுமன்றத்தால் பறிக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தின் கீழ் போய்விட்டது. எனவே, பல நிர்வாகச் செயற்பாடுகளை மாகாண அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியவில்லை. அதனால் உருவாகின்ற சமூகச் சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தவும் முடியாத நிலையில்தான் நாங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றோம். எனவே, எங்கள் முதல் அமைச்சர் ஐயா விக்னேஸ்வரன் அவர்கள், இந்த மாகாண சபையைக் கொண்டு நாங்கள் எதுவுமே செய்ய இயலாத நிலையில் இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்குத் தெளிவாக எடுத்துக் கூறி இருக்கின்றார்கள்.
இந்த மாகாண சபை என்பது ஒரு கருத்துக் களமாக இருக்க முடியுமே தவிர, நீண்ட காலமான எங்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைய மாட்டாது.
அருணகிரி: மாகாண சபையில் என்னென்ன அமைச்சுத் துறைகள் இருக்கின்றன?
ஆனந்தி: உள்துறை, விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி அமைச்சுகள் இருக்கின்றன. மூன்றாந்தரமான ஒரு குளத்தில் மீன் குஞ்சுகளை விடுவதற்கு மாகாண சபைக்கு அதிகாரம் இருக்கின்றதே ஒழிய, வளர்ந்த மீன்களைப் பிடிப்பதற்கான அதிகாரம் இல்லை. இத்தகைய நிலையில்தான் இலங்கையில் அதிகாரப் பரவல் இருக்கின்றது.
அருணகிரி: ஈழத்தமிழர்கள் கடலில் மீன்பிடித் தொழிலுக்குப் போக முடியாத அளவிற்குத் தடை விதித்து இருந்தார்களே, இப்போது அந்தத் தடைகளை விலக்கிக் கொண்டு இருக்கின்றார்களா?
ஆனந்தி: வலிகாமம் வடக்கு மாதகலில் இருந்து பலாலி வரையிலான பகுதிகளில் மீன்பிடித் தொழிலில்தான் வருமானம் ஈட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் 1990 களில் அங்கிருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டார்கள். இன்றுவரையிலும் மீளக் குடியேற்றப்படவில்லை. பொதுவாக வடக்கு மாகாணத்தின் கடற்கரை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எங்களுடைய கடல் வளம் அவர்களால் சுரண்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. எனவே, கடல் தொழில் ஊடாக மாகாண சபையால் எந்தவொரு வருமானத்தையும் ஈட்டக் கூடிய நிலைமை இல்லை.
இன்று இலங்கையில் சமாதானம் நிலவுகிறது என்று கூறுகின்ற மேற்கு உலகம், இந்த வாழ்வாரத்தை மீன்பிடித் தொழிலை இழந்து இருக்கின்ற, மைலட்டி இறங்குதுறையில் இருந்து மாதகல் வரையிலான பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பதைப் பற்றிப் பேசுவது இல்லை. வலிகாமம் வடக்கில் சுமார் 400 ஏக்கர் நிலத்தை மட்டும் அண்மையில் விடுவித்ததாகச் சொன்னார்கள். ஆனால் அந்தக் கிராமங்களில் கூட வெறும் கலட்டிக் காணிகளை மட்டும்தான் விடுவித்தார்களே ஒழிய, மக்களுடைய வீடுகள் நிலங்களை விடுவிக்கவில்லை. இன்னமும் அவை இராணுவ ஆக்கிரமிப்பிற்குள்தான் இருக்கின்றன. அப்படி வலிகாமம் வடக்கில் மட்டும் 6500 ஏக்கர் நிலம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கின்றது. அவை விடுவிக்கப்பட வேண்டும்.
அதுபோல கடற்கரையை அண்டி இருக்கின்ற நீள்பரப்பு, நான் சொன்னது போல மாதகல்லில் இருந்து பலாலி வரையிலான பகுதிகளில், வடக்கு மாகாண சபை உறுப்பினரான நான் கூடச் சென்று பார்க்க முடியாது. அங்கே அயல்நாட்டு ஐரோப்பியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில் இராணுவத்தினர் சொகுசு விடுதிகளைக் கட்டி வருமானம் ஈட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். ஒருமுறை அதைப் பார்ப்பதற்காக நான் காங்கேசன் துறைக்குச் சென்றபோது என்னைத் தடுத்து விட்டார்கள். நான் காங்கேசன்துறையைச் சேர்ந்தவள். அங்கே இருக்கின்ற என்னுடைய வீட்டைக் கூட நான் பார்க்க முடியவில்லை. அதிகூடிய விலையில் மதுபானங்கள் எந்நேரமும் கிடைக்கக் கூடியதாக, சமூகப் பிறழ்வான விபச்சார நடவடிக்கைகளும் அங்கே நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக சிங்கள இராணுவ அதிகாரிகளால் நடத்தப்படுகின்ற ‘தல்சவன’ என்ற ஓட்டலைப் பற்றிச் சொல்லுகின்றார்கள்.
வடக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருந்த மக்கள், 1990 முதல் 32 முகாம்களில் குடிசைகளில் தங்க வைக்கப்பட்டு எவ்வித வாழ்வாதாரங்களும் இன்றி வறிய நிலையில் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். உடனடியாக அவர்களை சொந்த இடங்களில் குடி அமர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
அருணகிரி: உள்துறை அமைச்சு என்று சொன்னீர்கள். அதற்குள் காவல்துறை இடம் பெறவில்லையா?
ஆனந்தி: இல்லை. காவல்துறை மற்றும் காணி (நிலம்) தொடர்பான அதிகாரங்கள் எதுவும் எங்களிடம் கிடையாது. அவை மத்திய அரசிடம்தான் உள்ளன. இந்த உள்துறை அமைச்சு முதல் அமைச்சரிடம் இருந்தாலும், வடக்கு மாகாணத்தில் அரச காணிகளை இராணுவத்தினர் அபகரிப்பது எங்கள் முதல் அமைச்சரின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
அருணகிரி: வடக்கு மாகாணத்தில் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கின்றன?
ஆனந்தி: மருத்துவமனைகள் ஓரளவிற்கு அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாக இருக்கின்றன. ஆனாலும் கூட போரினால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளை இழந்த, கை, கால், கண்கள் போன்ற உடல் உறுப்புகளை இழந்தவர்களும், சன்னங்களைச் சுமந்தவாறு இருக்கின்ற சுமார் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர்களுக்குப் போதுமான மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட பலர் இப்போது மனநோயாளிகளாக இருக்கின்றார்கள். வெளியில் தெரிந்த மனநோயாளிகள் தவிர, தெரியாத பலரும் இருக்கின்றார்கள். இவர்களுக்கான சிசிச்கைகள் எதுவும் இல்லை.
அண்மையில் எங்கள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள். தமிழகத்தில் இருந்து வைத்தியர்களையும், ஆங்கில ஆசிரியர்களையும் கொண்டு வருவதற்கான ஒரு பிரேரணையை மாகாண சபையில் முன்வைத்தார். ஆனால் தமிழகத்தில் இருந்து வைத்தியர்கள் வருவதை இங்கே இருக்கின்ற வைத்தியர்கள் விரும்ப மாட்டார்கள் என்று சுகாதார அமைச்சர் கூறியதை அடுத்து அது நிராகரிக்கப்ப்டடது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆற்றுப்படுத்துகை, சகல கிராமங்களிலும் உளவியல் மருத்துவத்திற்கான தேவைகளை நிறைவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. பாடசாலைகளில் படிக்கின்ற மாணவ மாணவியர்கள் கூட உடலில் துப்பாக்கிக்குண்டுகள் மற்றும் வெடிச்சிதறல்களைச் சுமந்தவாறு இருக்கின்றார்கள். அவர்களுக்கான மருத்துவ உதவிகளைக் கூடக் கைக்கொள்ளாமல் இருப்பது, இன்றைக்கும் போர்ச் சூழலில் இருந்து நாங்கள் மீள எழ முடியாத நிலையில் இருக்கின்றது.
அருணகிரி: வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றதா?
ஆனந்தி: யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரி மட்டும்தான் இருக்கின்றது. அதிலும் கூட போருக்குப் பிற்பாடு சிங்கள மாணவர்களுக்குக் கூடுதலான அனுமதி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். போருக்கு முந்தைய காலத்தில் யாழ் மருத்துவர்கள் எங்கள் மக்களுக்குச் சிறந்த கடமை உணர்வுபூர்வமாகக் கடமை ஆற்றிக் கொண்டு இருந்தார்கள். போருக்குப் பிற்பட்ட காலத்தில் மொழி தெரியாத சிங்கள வைத்தியர்கள் அதிகமான அளவில் கொண்டு வந்து இறக்கப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ் மருத்துவர்கள் தொலைவில் உள்ள சிங்களப் பிரதேசங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இது தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. திட்டமிட்ட அளவில், மிகச் சொற்பமான தமிழ் வைத்தியர்கள்தான் இப்போது வடக்கு மாகாணத்தில் இருக்கின்றார்கள்.
இப்பொழுது நான் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கின்றேன். அங்கே புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கின்ற சிங்கள வைத்தியர்களிடம் மக்கள் ஒரு வருத்தத்தைக் கூறுவதும், மொழி புரியாத மருத்துவர்கள் அதை வேறுவிதமாக விளங்கிக் கொள்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. தாதியர்கள் கூட சிங்களப் பெண்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களது அசமந்தப் போக்குகளையும் நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதுகூட எங்களுடைய மண்ணில் சிங்களவர்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்ற வகையில் ஒரு நீண்டகாலத் திட்டமாக இருக்கின்றது.
அருணகிரி: வடக்கு மாகாணத்தில் மக்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்காக புதிதாக என்ன தொழில்களைத் தொடங்க முடியும்? அதற்கான திட்டங்கள் எதையும் மாகாண சபை முன்னெடுத்து இருக்கின்றதா?
ஆனந்தி: தேர்ந்து எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் பார்த்தோமானால், எங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. காரணம் நிதிவளம் மிகப் பற்றாக்குறையாக இருக்கின்றது. இப்பொழுது எங்களிடம் உள்ள நிதி ஆதாரங்களைக் கொண்டு, மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கே உதவி அளிக்கக்கூடிய நிலைமை உள்ளது. அதைத் தவிர ஒரு வீதமான மக்களுடைய வாழ்வாதாரங்களைக் கட்டி எழுப்பக் கூட இயலாத நிலைதான் உள்ளது.
மகிந்த ஆட்சி மாறியதற்குப் பின்னர், அண்மையில்தன் முதல் அமைச்சர் நிதியத்திற்கான அங்கீகாரமே கிடைக்கப் பெற்று இருக்கின்றது. இந்த அங்கீகாரம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், புலம் பெயர் தமிழர்களிடமும், இதர நாடுகளிடமும் நாங்கள் நிதி உதவிகளைப் பெற்று மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்ய முடியும்; மீள் கட்டுமானப் பணிகளையும் ஆற்றக் கூடியதாக இருக்கும்.
தொடர்ந்து வருகின்ற காலங்களில் முதல் அமைச்சருடைய தலைமையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போது சிறுசிறு கைத்தொழில் முயற்சிகளை வடக்கு கிழக்கில் தொடங்குவதன் ஊடாக, போரினால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டு இருக்கின்ற குடும்பங்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்த முடியும் என்று நான் நம்புகின்றேன்.
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கைத்தொழில் பயிற்சியாளர்களை அனுப்பினால், அங்கே குழுக்களாகப் பெண்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும். அந்த உதவியைத் தமிழக முதல்வரிடம் இருந்து நான் எதிர்பார்க்கின்றேன். அவரும் ஒரு பெண் என்ற முறையில், போரினால் பாதிக்கப்பட்ட எங்களுடைய பெண்களுக்குக் கை கொடுக்க வேண்டிய கடமைப்பாடு தமிழக முதல்வருக்கு இருக்கின்றது.
அருணகிரி: யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு தொடர்வண்டித் தடம் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல, யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்குக் கரையோரமாக திரிகோணமலைக்குத் தொடர்வண்டித் தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கின்றீர்களா?
ஆனந்தி: இல்லை. இது ஒரு புதிய யோசனையாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த திரிகோணமலை நிலைமையும், இப்பொழுது உள்ள நிலைமையும் முற்றிலும் மாறுபட்டது. அண்மையில் நடந்த தேர்தலில் அங்கே ஒரேயொரு ஆசனத்தைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற முடிந்தது. எதிர்காலத்தில் அந்த ஆசனத்தையும் இழக்கக்கூடிய நிலைமைதான் காணப்படுகின்றது. சொல்லப்போனால் திரிகோணமலையை முற்றிலுமாக இழக்கக்கூடிய நிலைமைதான் இருக்கின்றது. எனவே, இதுவரையிலும் திரிகோணமலைக்குத் தொடர்வண்டித் தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை. தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து திரிகோணமலைக்குப் பேருந்துப் போக்குவரத்து மட்டும்தான் உள்ளது. முல்லைத் தீவுப் பகுதியில் ஒரு பாலம் கட்டி, தொடர்வண்டித் தடம் அமைத்தால் போக்குவரத்து எளிதாகும் என்று கருதுகிறேன்.
எங்கள் மாவட்டத்திற்குள் ஓடுகின்ற பேருந்துகள் மாகாண சபையின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், ஒட்டுமொத்தப் போக்குவரத்து என்பது மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குள்தான் இருக்கின்றது. பக்கத்து மாவட்டங்களுக்கான போக்குவரத்தைக் கூட மாவட்ட அரசாங்க அதிபர்தான் கட்டுப்படுத்துகிறார். எங்களுடையது குறுகிய தொலைவுப் போக்குவரத்துதான்.
அருணகிரி: மாவட்ட அரசாங்க அதிபருக்கு அதிக அதிகாரங்களா? அல்லது வடக்கு மாகாண சபை முதல்வருக்கா?
ஆனந்தி: மாவட்ட அரசாங்க அதிபர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். மத்திய அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்பவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். எங்களுடைய முதல்வரின் கட்டுப்பாட்டிற்குள் ஐந்து துறைகள் மட்டுமே வருகின்றன. அந்தத் துறைகளின் செயலாளர்கள் மட்டும்தான் அவரது கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். ஒரே பகுதியில் இப்படி இரண்டு முனைகளில் அதிகார மையங்கள் செயல்பட்டுக் கொண்டு இருப்பது கூட எங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கின்றது. மாவட்ட அரசாங்க அதிபர்கள் தங்கள் எண்ணப் பாங்கில் அரசாங்க நிலங்களை இராணுவத்தினருக்குப் பங்கு போட்டுக் கொடுத்து வருகின்றார்கள். இது எங்களுடைய நிலங்களைப் பறிக்கின்ற வேலைதான்.
2013 ஆம் ஆண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த விசாரணைக்கு ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது கிளிநொச்சி மாவட்ட அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் என்பவர் இருந்தார். அப்போது நான் அந்த மாவட்டச் செயலகத்தில் கடமை ஆற்றிக் கொண்டு இருந்தேன். மாவட் அதிபராக இருந்த ரூபவதி, அரசாங்க அதிகாரிகளை ஒன்று திரட்டி ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினார். விரும்பியோ, விரும்பாமலோ அனைத்து உத்தியோகத்தர்களும் அப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இவ்வாறாக, மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளை மக்கள் இடையே பரப்புகின்ற பணியைத்தான் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
அருணகிரி: ஈழத்தில் தற்போது 80,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாக இருப்பதாகச் சொல்கின்றார்களே...
ஆனந்தி: அப்படி இல்லை. இறுதிக்கட்டப் போரின்போது சரண் அடைந்து சிங்கள இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்களுடைய மனைவிமார்களையும் சேர்த்து அப்படிச் சொல்லுகிறார்கள். அதாவது பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களாக இப்போது 89000 பெண்கள் இருக்கின்றார்கள்.
அருணகிரி: போரில் கொல்லப்பட்டவர்களுடைய மனைவிமார்களின் மறு திருமணத்திற்காக வடக்கு மாகாண சபை திட்டங்கள் எதையும் முன்னெடுத்து இருக்கின்றதா?
ஆனந்தி: இல்லை. ஆனால் நீங்கள் சொல்லுகிறபடி அப்படி ஒரு திட்டம் தேவையானதாக இருக்கின்றது. அப்படி நிறைய இளம்பெண்கள் இருக்கின்றார்கள். முற்றிலும் இராணுவத்தால் சூழப்பட்ட பகுதியில் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சமூகத்தின் பார்வையிலும் அன்றாடப் பிரச்சினைகளை அவதானித்துக் கொண்டு இருக்கின்றோம். அவர்களுக்கு மறுமணம் செய்வது என்ற கருத்து ஏற்பு உடையதுதான். ஆனால் இப்போது அந்த அளவிற்கு முற்போக்குச் சிந்தனை உள்ள சமூகத்தை நாங்கள் காண இல்லை.
அருணகிரி: மாகாண சபையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்? மாகாண சபை கூட்டங்கள் எப்போது நடைபெறுகின்றன?
ஆனந்தி: வடக்கு மாகாண சபையில் 38 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். மாதம் ஒருமுறை கூட்டப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் அமர்வு நடைபெறுகிறது. அலுவல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்த அதிகாரங்களும் இல்லாத நிலையில், ஒரு உறுப்பினர் என்ற முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வருவது மட்டும்தான் என்னுடைய பணியாக இருக்கின்றது. எதிர்காலத்திலும் சிங்களப் பேரினவாதிகள் எங்களுக்கு எந்தவிதமான அதிகாரங்களையும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
அருணகிரி: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணிக்கு 16 இடங்கள் கிடைத்து இருக்கின்றது. தவிர, இரண்டு சிங்களக் கட்சிகளில் தமிழர்கள் எவரேனும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்களா?
ஆனந்தி: ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் இருந்து, விஜயகலா மகேஸ்வரன் என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்.
அருணகிரி: தமிழ் தேசியக் கூட்டு அமைப்பின் சார்பில் பெண்கள் எவரேனும் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்களா?
ஆனந்தி: இல்லை. வடக்கு மாகாண சபையிலும் கூட நான் மட்டும்தான் ஒரேயொரு பெண் உறுப்பினர்.
அருணகிரி: முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பத்மினி சிதம்பரநாதன் அவர்களை நான் நேர்காணல் கண்டு இருக்கின்றேன். இம்முறை அவரும் போட்டியிட்டாரே?
ஆனந்தி: அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய அணியின் சார்பில் களம் இறங்கினார். அந்த அணியில் மூன்று பெண்கள் களம் இறக்கப்பட்டார்கள். ஒருவரும் தெரிவு செய்யப்படவில்லை. எனக்கு வாய்ப்புக் கிடைத்து இருந்தால் உறுதியாக வெற்றி பெற்று இருப்பேன். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் ஈழத்தமிழ்ப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை.
அருணகிரி: பெண்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் எந்த நிலையில் இருக்கின்றன?
ஆனந்தி: போரில் கூடுதலாக ஆண்கள் அழிந்ததும், கைது செய்யப்பட்டதும், காணாமல் போனதும், அச்சம் காரணமாகப் பொடியன்கள் நாட்டை விட்டு வெளியேறினதுமான காரணங்களால், பெண்கள் கூடுதலாக உயர்கல்வி இடங்களைப் பெறக் கூடியதாக இருக்கின்றது. எனவே, ஒப்பீட்டு அளவில் இப்போது ஈழத்தில் ஆண்களை விடப் பெண்கள்தான் கூடுதலாகக் கல்வி வாய்ப்புகளைப் பெறுகின்றார்கள்.
அருணகிரி: புலம் பெயர்ந்து சென்ற தமிழ் இளைஞர்கள் தற்போது ஈழத்தில் உள்ள பெண்களைத் திருமணம் செய்வதற்குத் தடைகள் ஏதும் உள்ளனவா?
ஆனந்தி: அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அவர்கள் ஈழத்திற்கு வந்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டு போகிறார்கள். அல்லது, தாங்கள் இருக்கின்ற நாடுகளுக்குப் பெண்களை வரவழைத்துத் திருமணம் செய்து கொள்கின்றார்கள். விடுதலைப்புலிகளின் காலத்தில் சாதி, மதம், சீதனம் போன்றவை ஒழிக்கப்பட்டு, பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டு இருந்தன. இப்போது சாதி, சீதனம் போன்றவை மீளத் தலைதூக்கி இருக்கின்றது. சொல்லப்போனால் சீதனம்தான் ஒருவருடைய திருமணத்தைத் தீர்மானிக்கின்றது என அனந்தி சசிதரன் அவர்கள், எழுத்தாளர் அருணகிரி அவர்கள் நேர்காணலுக்கு பதிலளித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment