வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறக்கப்பட்டபோது, ஜெயலலிதா அரசு செய்த இமாலய தவறால் தலைநகரமே வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிவிட்டன. இலட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து உடைமைகளை பறிகொடுத்துவிட்டு, வீதிகளில் அலைந்த கொடுமையை வார்த்தைகளால் வடிக்க முடியாது.
மழை வெள்ளம் குறித்தும், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அதிகரித்து வருவது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், ஜெயலலிதா அரசின் நிர்வாகம் செயலற்றுக் கிடந்தது. மீட்புப் பணிகளை முடுக்கி விடவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளாமலும் தமிழக அரசின் நிர்வாக இயந்திரம் முடங்கிக் கிடந்தது கடும் கண்டனத்துக்கு உரியது. இதற்கு முதல்வர் ஜெயலலிதாவே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேரிடர் நிதியாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அள்ளி வழங்கிய மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண உதவித் தொகையை மிக மிக சொற்ப அளவில் ஒதுக்கி இருக்கிறது. மத்திய அரசின் இத்தகைய ஓரவஞ்சனை போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாகக் கணக்கெடுத்து, அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழப்புகளை குறைத்துக் காட்டாமல், உண்மையாகக் கணக்கெடுத்து இழப்பீடு அளிக்க வேண்டும.
மழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளம் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை முற்றாக அழித்துவிட்டது. வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகள், அரசின் உதவிகளை எதிர்பார்த்திருந்த நிலையில், முதல்வர் அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது.
வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக மழை பெய்த மாவட்டங்கள் பற்றிய விபரங்களை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி கனமழை பெய்த மாவட்டங்கள் அனைத்தையும் மழை வெள்ள சேத மாவட்டங்களாக அறிவித்து, தமிழக அரசு வெள்ள நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் வேளாண் தொழிலுக்காக விவசாயிகள் பெற்றுள்ள நகைக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் அனைத்துப் பயிர்களுக்கும் அனைத்துப் பருவங்களிலும் பயிர்க்காப்பீடு வழங்கப்படுகிறது. அதுபோன்று தமிழகத்திலும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான அனைத்து மாவட்டங்களிலும் முழுமையான பயிர்க்காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி, இதற்கான பிரிமியம் தொகையை மாநில அரசே செலுத்த வேண்டும்.
பெருமழையினால் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வேலை வாய்ப்பின்றி வருமான இழப்பை சந்தித்துள்ளதால், வங்கிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அமைத்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் முறையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளப் பெருக்கால் அம்பத்தூர் உள்ளிட்ட பல தொழிற்பேட்டைகளில் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் நீரில் மூழ்கியதால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இழப்பீடு வழங்குவதுடன், வேலை வாய்ப்பின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிவாரண சட்டத்தின் கீழ், நிவாரண உதவிகள் வழங்குவதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நெற்பயிர் ஏக்கருக்கு 25 ஆயிரம், கரும்பு, வாழை ஏக்கருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம், மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகள், குடிசைகள் மற்றும் கால்நடை இழப்புகளுக்கு நிவாரணத்தொகை எவ்வளவு என்றும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்தான் தமிழக அரசு வெள்ள நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை நிவாரண சட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் மத்திய அரசு இழப்பிட்டுத் தொகையை மாற்றி அமைத்து வருகிறது. இதில் திருத்தம் கொண்டுவந்து, சட்ட விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப விவசாய விளைபொருட்கள் உள்ளிட்ட சேதங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க ஆவண செய்வது மட்டுமல்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை இழப்பீட்டுத் தொகையை மாற்றி அமைத்து, உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு, தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்து, குறைந்தபட்சம் 50 ஆயிரம் கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, மக்கள் நலக் கூட்டணி சார்பில், டிசம்பர் 31 ஆம் தேதி காலை 10 அளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மக்கள் நலக் கூட்டணி சார்பில், வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கிறோம்.
மக்கள் நலக் கூட்டணி தோழர்களும், பொதுமக்களும் பெருமளவில் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான,
வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன்
ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment