முதல்வர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்: மக்கள் நலக்கூட்டணியினர் வேண்டுகோள்உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
தமிழக வரலாற்றில் காண முடியாத பெரும் சோகமும், சோதனையும் சூழ்ந்து, தமிழ் நாட்டு மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை உள்ளிட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்துத் தரப்பு மக்களும் உடலில் ஒட்டியுள்ள உயிரைத் தவிர எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற கொடுமை வார்த்தைகளில் அடங்கிவிடாது.
லட்சக்கணக்கான குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. சென்னையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால், வீடுகளில் இருந்த மக்களின் உடைமைகள் அனைத்தும் பறிபோய்விட்டன. உணவு, குடிநீர், தங்கும் இடம் இன்றி இலட்சக்கணக்கான மக்கள் சென்னை தெருக்களில் ஏதிலிகளாக நிற்கும் துயரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
குவிந்து கிடக்கும் குப்பைகள், சுகாதாரச் சீர்கேடு, மருத்துவ உதவியின்மையால், பெருமளவு மக்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மனிதநேயம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதற்கு உதாரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஓடோடிச் சென்று மக்களின் துயர் துடைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்று வருகின்றனர்.
இயற்கை பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்டதால்தான் சென்னை மாநகரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. மழை வெள்ளத்தால் இலட்சக்கணக்கான விளை நிலங்களில் பயிர்கள் சேதம் அடைந்து, விவசாயிகள் வேதனையின் விளிம்பில் இருக்கின்றனர். கால்நடைகள் உள்ளிட்ட வாழ்வாதரங்களை இழந்திருக்கின்றனர்.
தமிழக அரசு சார்பில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவிகள் யானை பசிக்கு சோளப் பொரி போலத்தான் இருக்கின்றது. வெள்ளப் பாதிப்பில் குடிசைகளை இழந்தவர்களுக்கு ரூபாய் 5000 உதவித்தொகை என்பதும், நிரந்தர வீடுகளில் வசித்து வந்த மக்களுக்கு ரூபாய் 5000 இழப்பீடு, இவற்றுடன் வெள்ள நிவாரண உதவித் தொகையாக ரூபாய் 5000த்துடன், பத்து கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை என்று முதல்வர் அறிவித்திருப்பது நியாயமான இழப்பீடு அல்ல.
முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 25 ஆயிரம், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், துணிமணிகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும்.
அரசு கட்டிக் கொடுத்துள்ள தொகுப்பு வீடுகள், தானே வீடுகள், பசுமை வீடுகள் மற்றும் சொந்தமாக கட்டியுள்ள ஒட்டு வீடுகளுக்கு இழப்புக்கு ஏற்ப நிவாரணத்தொகை வழங்கிட வேண்டும். விவசாய நிலங்களில் சேதமுற்ற நெல் உள்ளிட்ட நீர்ப்பாசன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 5400 இழப்பீடு அளிப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
விவசாய பயிர் இழப்புக்கு, நெல், மரவள்ளி போன்ற விளைபொருட்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் மற்றும் கரும்பு, வாழை, பருத்தி, சவுக்கு உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு ரூபாய் ஒன்றரை இலட்சமும், தோட்டப் பயிர்கள், நீண்ட காலப் பயிர்களுக்கும் சேதத்திற்கு ஏற்ப முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
கால்நடைகளை இழந்தவர்களுக்கு மாடுகளுக்கு ரூபாய் 50 ஆயிரம், ஆடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரம், கோழிகளுக்கு ரூபாய் 500 என்று நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 30 கிலோ அரிசி, நிவாரண தொகை ரூபாய் 5000, மீனவர் குடும்பங்களுக்கு ரூபாய் 5000, சேதம் ஏற்பட்ட படகு, வலைகளுக்கு முழுமையான நட்ட ஈடும் வழங்கிட வேண்டும். .
அகில இந்திய வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் ரத்தோர், டிசம்பரின் தொடக்கத்திலேயே சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அக்டோபர் மாதத்திலேயே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு முன்கூட்டி எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வெள்ளம் பிரளயமாகச் சூழும்போது மக்களைக் காப்பதற்காக படகுகள் மற்றும் உணவு, தண்ணீர், மருந்துகள் என எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.
மழை வெள்ளம் பாதிக்காத மாவட்டங்களிலிருந்து தேவையான பொருட்களையும், நபர்களையும், அதிகாரிகளையும் வரவழைத்து பேரிடர் மீட்புக்கான வேலை எதுவும் செய்யவில்லை.
பொதுமக்கள் தாளமுடியாத துன்பத்திற்கு ஆளாகி இருப்பது குறித்த பதட்டமோ, அக்கரையோ முதலமைச்சருக்கு துளியும் இல்லை என்பதற்கு அவர் அறிவித்துள்ள நிவாரண அறிக்கையே சரியான சான்றாகும்.
இலட்சக்கணக்கில் தங்களுடைய முதலிடுகள், வீடு வாசல் உடைமைகள் இழந்து அனைத்தையும் இழந்து, அகதிகளைப்போல் ஆகிவிட்ட மக்களின் துயரத்தைப் போக்குவதற்கான அக்கரை இல்லாததால்தான் தமிழக அரசு உரிய காலத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தவறியதற்குக் காரணம்.
எனவே அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை எவ்விதத்திலும் மக்களின் துயரைத் தணிக்காது என்பதை உணர்ந்து நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கிட வேண்டும்.
இயற்கை பேரிடரால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழ்நாட்டை இயற்கை பேரிடர் பாதிப்பு மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். காஷ்மீரத்துக்கு 80 ஆயிரம் கோடியும், பீகாருக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கோடியும் சிறப்பு நிதியாக அறிவித்த இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு அறிவித்துள்ள நிதி மிக மிக குறைவாகும். எனவே தமிழகத்துக்கு அதிக நிதி வழங்க வேண்டும்.
இதற்கு முன்பு வெள்ள நிவாரணம் வழங்கியதில் அண்ணா தி.மு.க. அரசு ஆளும் கட்சி நிவாரணமாகவே அதனை வழங்கியதால், மீண்டும் அதே விதமான வேலையைத்தான் செய்ய முற்படும். எனவே, பெருமளவு ஊழலுக்கும் இது வழிவகுக்கும் என்பதால் அனைத்துக் கட்சிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைத்துத்தான் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கி சேவை முலம் நேரடியாக வழங்கவும், வரைவோலைகள் மூலம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாறு காணாத பேரிடருக்கு தமிழகம் ஆளாகி இருப்பதால், முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்.
இவ்வாறு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, இராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment