சுதந்திர இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் அனைத்துச் சட்ட வல்லுநர்களாலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வந்த வழக்குதான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடி வரும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஆகும்.
இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நால்வருள் முதல்வரான நளினிக்கு, தமிழக ஆளுநர் ஆணைப்படி மரண தண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டது.
முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவர் மீது விதிக்கப்பட்டு இருந்த மரண தண்டனையை, அவர்களது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த பின்னர், உச்சநீதிமன்றம் 2014 பிப்ரவரி 18 ஆம் தேதி ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
மேற்கண்ட நால்வருடன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் சேர்ந்து மொத்தம் ஏழு பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து மத்திய அரசு வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் ஏழு கேள்விகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுமைக்குமா? அல்லது 14 ஆண்டுகளுக்கு மேலும் தண்டனைக் குறைப்புக்கு இடம் இல்லாத, வகைப்படுத்தப்படும் வழக்குகளா?
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக ஆக்குவதற்கும், தண்டனையைக் குறைப்பதற்கும், அரசியல் சட்டத்தின் 72 ஆவது பிரிவு குடியரசுத் தலைவருக்குக் கொடுத்து இருக்கின்ற அதிகாரம் குறித்தும், அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவு, அதே அதிகாரத்தை மாநில ஆளுநருக்குக் கொடுத்து இருப்பது குறித்தும், குற்ற இயல் நடைமுறைச் சட்டத்தின் 432 (7) பிரிவு, மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறதா? என்பது குறித்தும், மாநில அரசு மத்திய அரசின் ஆலோசனையைப் பெறுவது என்பது, மத்திய அரசின் ஒப்புதல் என்று பொருள்படுமா? என்பது போன்ற கேள்விகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. டிசம்பர் 2 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
258 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பில், தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதி இப்றாகிம் கலிபுல்லா, நீதிபதி பினாகி சந்திர கோஷ் ஆகியோர் 174 பக்கங்களில் எழுதிய தீர்ப்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் தண்டனை குறைக்கப்பட்ட கைதிகளை, மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் மாநில அரசு விடுதலை செய்ய முடியும்; எனவே இந்த ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்ற தீர்ப்பு அளித்துள்ளனர்.
இந்த அமர்வின் மற்ற இரண்டு நீதிபதிகளான, நீதிபதி உமேஷ் லலித், நீதிபதி மனோகர் சாப்ரி ஆகிய இருவரும், ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதற்குமான தண்டனை என்பதை ஏற்க இயலாது என்ற ஒரு கருத்தில் மட்டும் மற்ற மூவரிடம் இருந்து மாறுபட்டு எழுதி உள்ளனர்.
மொத்தத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ராஜீவ் காந்தி வழக்கின் ஏழு பேர்களை மட்டும் குறித்தது எனக் கருதக் கூடாது. இந்திய அரசியல் சட்டம் 161 ஆவது பிரிவு மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரம், மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டது அல்ல என்பதுதான் சரியான நிலைப்பாடு ஆகும். இந்தக் கேள்வி, பல ஆண்டுகளாகவே முடிவுக்கு வராமல் இருந்துள்ளது.
இந்திய அரசியல் அமைப்பின் கூட்டு ஆட்சித் தன்மை குறித்தும், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் குறித்தும், மிகுந்த கவலை தருகின்ற விதத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமுல்படுத்துவதற்குத்தான் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றதே அல்லாமல், ஆய்வுக்கு அல்ல.
எனவே, மனித உரிமைகள், மாநில உரிமைகள் ஒரு குறித்து திட்டவட்டமான ஒரு பாதுகாப்பு ஏற்பட வேண்டுமெனில், தற்போது உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு வழங்கி இருக்கின்ற தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும்.
இதற்கு முன்னர், இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சினைகளில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது அல்லது பதின்மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகள் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றன. அதுபோல ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்குரிய முயற்சிகளைத் தமிழக அரசு சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும்.
ராஜீவ் காந்தி வழக்கில், எந்தக் குற்றமும் செய்யாத நிரபராதிகளான ஏழு பேரும் 24 ஆண்டுகள் சிறையில் விவரிக்க இயலாத மன அழுத்தத்திற்கும், தாங்க முடியாத துன்பத்திற்கும் ஆளாகி உள்ளனர்.
மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக அரசு முனைப்பாக ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment