அகில இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (All India Post Graduate Medical Entrance Exam - AIPGMEE) டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர் மழை வெள்ளம் காரணமாக சென்னை, அம்பத்தூரில் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வு திட்டமிட்டவாறு நடைபெறுமா என்று உயர் மருத்துவக் கல்விக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, உறுதியாக நடக்கும் என்று மருத்துவக் கவுன்சில் சார்பில் கூறப்பட்டது. சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த மோசமான சூழலிலும், டிசம்பர் 2 ஆம் தேதி அம்பத்தூரில் நுழைவுத் தேர்வு நடக்கும் மையத்துக்கு மருத்துவர்கள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு நுழைவுத் தேர்வு நடைபெறாதது மட்டுமல்லாமல், பொறுப்பாக பதில் கூற ஒருவரும் வரவில்லை. அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் இத்தகைய பொறுப்பற்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு மீண்டும் ஜனவரி 11, 2016 இல் நடைபெறும் என்று அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆனால் டெல்லி, மும்பை, புனே, புவனேÞவரம், காஷ்மீர், மேகாலயா போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேர்வு மையங்களுக்குச் சென்று தமிழகத்தில் மருத்துவ உயர்கல்விக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்கள் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று மருத்துவக் கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதிட காத்திருக்கும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் காலம், இடம் யாவும் மருத்துவக் கவுன்சில்தான் தீர்மானிக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ உயர் கல்வி இடங்களுக்கு தமிழ்நாட்டில் விண்ணப்பித்திருப்போர் நுழைவுத் தேர்வு எழுத முடியாத நிலை உருவாகும் பட்சத்தில் அந்த இடங்களை மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து விடலாம் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் கருதுகிறது. எனவேதான் மருத்துவ மேற்படிப்புக்காக நுழைவுத் தேர்வை டெல்லி, மும்பை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் இத்தகைய அணுகுமுறை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல, எதேச்சதிகாரமானது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
எனவே ஜனவரி 11, 2016 அன்று நடக்க இருக்கின்ற மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையிலேயே எழுதிடும் வகையில் தேர்வு மையத்தை ஏற்பாடு செய்திட மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு, உடனடியாக இதில் கவனம் செலுத்தி மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வு தமிழகத்தில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment