பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டு கட்சிக்கும் வேறுபாடு இல்லை. மோடி அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சென்ற வழியில்தான் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. உலக வர்த்தக நிறுவனம், உலக வங்கி இடுகிற உத்தரவுகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதார இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு அடகு வைத்து வரும் நிலைமை தொடர்கிறது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 36.05 டாலர் என்ற அளவில் வீழ்ச்சியடைந்துவிட்டது. இது 2004 ஆம் ஆண்டு இருந்த விலை நிலவரமாகும். கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்து வரும் மத்திய அரசு பன்னாட்டுச் சந்தையில் கச்ச எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும்போது அதற்கு ஏற்றவாறு விலையைக் குறைத்திருக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை 2004 ஆம் ஆண்டு இருந்த அளவுக்கு குறைந்திருக்கும் நேரத்தில் அப்போதிருந்த விலையான பெட்ரோல் விலை ரூபாய் 35.71 ஆகவும், டீசல் விலை 22.74 ஆகவும் இருந்த அளவுக்கு தற்போது பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. அரசு இதற்குத் தயாராக இல்லாதது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை தொடர்ந்து உயர்த்தி கச்சா எண்ணெய் வீழ்ச்சியின் பயன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.
2004 ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு உருளை ரூபாய் 261.60 ஆக இருந்தது. தற்போது சுமார் 100 விழுக்காடு உயர்ந்து, ரூபாய் 419.26 ஆகிவிட்டது. இந்நிலையில் பத்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
சமையல் எரிவாயு மட்டுமின்றி, அரசின் சார்பில் மக்களுக்கு எவ்வித மானியமும் அளிக்கக் கூடாது என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டளையாகும். தற்போது ஆண்டுக்கு 10 இலட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு மானியம் ரத்து என்கிற அறிவிப்பின் மூலம், படிப்படியாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முழு மானியத்தையும் ரத்து செய்யப்படும் நிலைமை உருவாக்கப்படும். தாமாக முன்வந்து இதுவரை 57.5 இலட்சம் பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசின் மானிய சுமை கணிசமாக குறைந்துவிட்டது. இந்நிலையில், மத்திய அரசு சமையல் எரிவாயு மானிய இரத்து அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணைய்தள அணி
No comments:
Post a Comment