தமிழ் மரபையும் பண்பாடுகளையும் பேணிக் காத்து வருகின்ற செட்டிநாட்டில் பிறந்து, வ.சுப. மாணிக்கனார் போன்ற அறிஞர் பெருமக்களிடம் பயின்று, தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ் அண்ணலாகத் தன்னிகர் அற்ற பணிகள் செய்த மூத்த தமிழ் அறிஞர், நேற்று மறைந்துள்ளார்.
‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ போன்ற அமைப்புகளை உருவாக்கி, தமிழைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் பேணிட வேண்டும் எனக் காலமெல்லாம் போராடியவர்.
திரு வி.க. விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது,செம்மொழி விருது போன்ற தகுதியான விருதுகளை மிகுதியாகப் பெற்றவர்.
சங்கம் வளர்த்த மதுரையில் தியாகராசர் கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி, ஒப்பற்ற பணிகளை ஆற்றியவர்.
வாழையடி வாழையென வளரும் தமிழ் அறிஞர் பெருமக்களைத் தம் வழிமரபில் உருவாக்கிய பெருமகனார்.
சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மீது எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வு நூல்களையும் எழுதியவர்.
கட்டுரை இலக்கியம், கவிதை, சிறுகதை என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். ‘மெல்லத் தமிழ் இனி வெல்லும்’ என்று சொல்லும் வகையில், மரபுத் தமிழ் சார்ந்த ஆய்வுகளையும், புதுப்புதுக் கோணங்களில் கருத்து அரங்குகளையும் வழிநடத்தியவர்.
அப்பெருமகனாருடன் பல நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கின்றேன். பலமுறை சந்தித்து உரையாடி, அரியக் கருத்துகளை கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன்.
தமிழ் உள்ளவரையில் வாழும் ஒப்பற்ற தமிழ் அறிஞர் தமிழ் அண்ணல் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மாணாக்கர்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலகிற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தனது இரங்கலில் வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment