தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட நீர்ப்பாசனப் பயிர்களை அழித்துவிட்டது.
வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் அரசின் உதவிகளை எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல்வர் அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது. இந்நிலையில், விவசாயப் பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டுப் பிரிமியத்தை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், சிட்டா, அடங்கல் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரி பரிந்துரை போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இணைய சேவைகள் முற்றிலும் செயலிழந்து உள்ளதால், விவசாயிகள் சிட்டா, அடங்கல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மாநகரம் மழை வெள்ள சேதத்தால் பெரும் சீரழிவை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளான கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை இரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெள்ளத்தால் சீர்குலைந்த சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களின் கல்விக் கட்டணங்களை இரத்து செய்திட கல்வி நிறுவனங்கள் மனிதாபிமானத்துடன் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment