இந்தியாவில் தாராளமய, உலகமய, தனியார்மய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட 24 ஆண்டுகளில் பொருளாதார இறையாண்மை, தனித்துவமான வெளியுறவுக் கொள்கை பறிபோனதைக் கண்கூடாகக் காண்கிறோம். தற்போது பா.ஜ.க. அரசு, கல்வித்துறையையும், அந்நிய நாடுகளுக்கு தாரை வார்த்துக்கொடுத்து அறிவுத்துறையிலும் நாட்டை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது.
உலக நாடுகளை தங்கள் பிடியில் ஆட்டிப் படைக்கும் உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம் ஆகியவை உருவாக்கிய உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் 1995 இல் கையெழுத்திட்டன. உலக வர்த்தக ஒப்பந்தம் (காட்) நடைமுறைக்கு வந்த இருபது ஆண்டுகளில் உலக நாடுகளிடையே பொருளாதார ஏற்ற தாழ்வுகளும், சமச்சீரற்ற வளர்ச்சியும் இருப்பதை மறுக்க முடியாது.
உலக வர்த்தக ஒப்பந்தத்தில் அறிவுசார் கல்வித் துறையையும் சேர்த்து வணிகமயமாக்கும் வரைவுத் திட்டத்தை உலக வர்த்தக நிறுவனம் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதன் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. கடந்த 15 ஆண்டுகளாக பல சுற்றுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலான நாடுகள் கல்வித் துறையை வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்பு அளிக்க தயங்கிக்கொண்டிருக்கின்றன.
2004 இல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கல்வித்துறையை சந்தைப் பொருளாக்கி, உயர்கல்வித் துறையில் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பா.ஜ.க. அரசு உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் கல்வியை சந்தைப் பொருளாக்க இசைவு தெரிவித்து, கையெழுத்திட முடிவு செய்திருக்கிறது.
டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடக்கும் உலக வர்த்தக நிறுவன உறுப்பு நாடுகளின் 10 ஆவது வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் கையெழுத்திடுவதற்கு வர்த்தக அமைச்சர் செல்ல இருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போது, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கல்வித் துறையையும், வர்த்தக மயமாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மோடி அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது.
உலக வர்த்தக நிறுவன வழிகாட்டுதல் படி, கல்வியை சந்தைப் பொருளாக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் இந்திய உயர்கல்வித்துறையில் நுழைய வழி ஏற்பட்டு விடும். நமது கல்விக் கொள்கை அயல்நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். கல்வித் துறையில் பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் முதலீடு செய்யுமானால், அவை லாபம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும். சேவைக்கு முன்னுரிமை கொடுக்காது. கல்வித் துறையில் அரசின் முதலீடுகள் முழுமையாக ரத்து செய்யப்படும். கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் கோடானு கோடி ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கிறது. கல்வி உலகமயமானால் செலவு அதிகரித்து ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகிவிடும்.
அரசியல் சாசனத்தின் அடிப்படையான சமூக சமத்துவம் என்பதை பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் தகர்த்துவிடும். அந்நிய நேரடி முதலீடு கல்வித்துறையில் நுழையுமானால் பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு வேலையே இருக்காது. எவ்வித கட்டுபாடும் இன்றி அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் ஊடுருவினால் கல்வித்துறையில் இறையாண்மை பறிபோய்விடும். இதனால் அறிவுசார் துறைகளில் வளர்ந்த நாடுகளை சார்ந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். இந்திய சட்டங்கள், பன்னாட்டு கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது என்பதால், கல்வித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் நலன்களுக்காக புதிய சட்டங்கள் இயற்றப்படும். பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வித்துறை முழுவதுமாக உலக மயத்திற்கு மாறும்போது, மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாட்டு அடையாளங்கள் உருக்குலையும் ஆபத்து நேரிடும்.
ஒடுக்கப்பட்ட பின்தங்கிய சமூகத்திற்கு விடியலை தந்த இட ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமூக நீதிக் கொள்கை புதை குழிக்குப் போய்விடும். எனவே கல்வியை சந்தைப் பொருளாக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவை பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment