சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கடலூர் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்துவரும் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளனர்.நூற்றுக் கணக்கில் கால்நடைகள் இறந்துள்ளன. லட்சக் கணக்கானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். பல லட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி அழிந்துள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பெய்துவரும் கனமழையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு மக்களை சந்தித்து நாங்கள் ஆறுதல் கூறினோம். வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்கள் இயன்றவிதங்களிலெல்லாம் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதிவரை வழக்கமாகப் பெய்யவேண்டியதைவிட சென்னையில் 89%ம், திருவள்ளூரில் 139%ம், காஞ்சிபுரத்தில் 154%ம் , கடலூரில் 71% ம் கூடுதல் மழை பெய்துள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதிவரை இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏரிகள் உடைப்பெடுத்த காரணத்தால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்யும் மழையின் பெரும்பகுதி நீர் சென்னை நகரத்துக்குள் புகுந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் சொல்லவொண்ணா துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர்.
இயற்கையின் இந்தத் தாக்குதலை மாநில அரசாங்கம் மட்டுமே சமாளிக்க முடியாது.தற்போது சென்னை நகரில் வெள்ளம் சூழ்ந்து தங்குவதற்கு இடமின்றித் தவிப்பவர்களுக்கு ஏராளமான தனி நபர்கள் தாமே முன்வந்து தமது வீடுகளில் இடமும் உணவும் அளித்துள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்கள் சில தமது கட்டிடங்களை இப்படித் திறந்துவிட்டுள்ளன. இந்த மனிதநேயப் பண்பைப் பாராட்டுகிறோம். இதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சென்ன நகருக்குள் இருக்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் பொதுமக்களுக்கு இடம் அளித்து உதவ முன்வரவேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
அரசு அலுவலகங்களும், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனகங்களும் விடுமுறையின்றி இயங்குவதால் அவற்றுக்குச் செல்லும் ஊழியர்கள், அலுவலர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாகப் பெண்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே அத்தியாவசியப் பணிகளுக்கான துறைகள் தவிர அரசு அலுவலகங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 5 வரை விடுமுறை அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
மழை வெள்ளத்திலும் மது விற்பனை நிற்கவில்லை. மழை நேரத்தில் அளவுக்கதிகமாக மது அருந்துபவர்கள் போதையில் தள்ளாடி விழுந்தால் வெள்ளத்தில் அடித்து செல்லப்படலாம். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும். எனவே மழை வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மாவட்டங்களில் மழை முற்றாக நிற்கும்வரை டாஸ்மாக் கடைகளை மூடி மது விற்பனையை நிறுத்திவைக்க உத்தரவிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
வெள்ள நிவாரணப் பணிகளில் வீண் கௌரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சியினரையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும், தனியார் பள்ளிகள்,கல்லூரிகளின் நிர்வாகத்தினரையும் ஈடுபடுத்த அரசு முன்வரவேண்டும். சாலைகள்,ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டு தீவாக மாறியிருக்கும் சென்னையைக் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஜிஎஸ்டி சாலை,கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றை ராணுவத்தின் உதவியுடன் உடனடியாக சீரமைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் இயற்கைப் பேரிடரில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்திட முன்வாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறோம் என ஒருங்கிணைப்பாள வைகோ மதிமுக, ஜி.ராமகிருஷ்ணன் சிபிஐ எம், இரா.முத்தரசன் சிபிஐ, தொல்.திருமாவளவன் விசிக ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment