தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும், தமிழக மக்களின் கல்விக்கும் ஈடு இணையற்ற சேவை செய்தது செட்டிநாட்டு அரசர் குடும்பம்.
ராஜா சர் அண்ணாமலை செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவி, இலட்சோப இலட்சம் மாணவர்கள் உயர்கல்வி பெறக் காரணம் ஆனார்.
திராவிட இயக்கத்துக்கு, குறிப்பாக பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பக்க பலமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் திகழ்ந்தது.
தந்தை பெரியார் அவர்களுக்கு ராஜா சர் முத்தையா செட்டியார் பெரும் துணையாக இருந்தார். அவரது மகனான எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் தலைசிறந்த மனிதாபிமானி ஆவார். கல்வித் துறையை, விளையாட்டுத் துறையை மிகவும் ஊக்குவித்தார்.
அகில இந்திய ஹாக்கி சங்கத்துக்குத் தலைவராக அவர் இருந்தபோதுதான் உலகக் கோப்பையை இந்தியா வென்றது.
ஆயிரக்கணக்கில் குதிரைகளைப் பராமரித்த அப்பெருமகனார், குதிரைப் பந்தயத்தில் 500க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றார்.
அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைவரிடத்திலும் மிக எளிமையாகவும், அன்பாகவும் பழகக்கூடிய பண்பாளர் ஆவார்.
கடந்த நான்கு ஆண்டுக் காலமாக அவர் தாங்க முடியாத மனவேதனைக்கு ஆளாகி நலிந்தார். கடந்த நவம்பர் 6 ஆம் தேதி அன்று என் தாயார் மாரியம்மாள் இறந்தபோது, அன்று பிற்பகலில் தொலைபேசியில் என்னிடம் தன்னுடைய அனுதாபத்தைத் தெரிவித்தார்.
எண்ணற்ற குடும்பங்களை வாழ வைத்த அந்த உத்தமர் கடைசி நாட்களில் நோயால் மிகவும் நலிந்து மறைந்தது குறித்து தாங்க முடியாத வேதனை அடைந்தேன். அப்பெருமகனாரின் மறைவினால் கண்ணீரில் தவிக்கும் உற்றார் உறவினருக்கும், நண்பர்களுக்கும், அவரை உயிராக நேசிக்கும் உதவியாளர்கள், செட்டிநாட்டு மாளிகையின் அலுவலர்கள் அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன் என வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment